புழல்: 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 3 டிஎம்சியாக உயர்ந்து கடல் போல புழல் ஏரி காட்சியளிக்கிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் புழல் ஏரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த மே மாதம் பூண்டி ஏரியின் நீர்வரத்து காரணமாக புழல் ஏரியின் நீர்மட்டம் 3 டிஎம்சி நிரம்பியிருந்தது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் ஏரிநீர் வேகமாக சரிந்து வந்தது. தற்போது, பூண்டி ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக புழல் ஏரியின் நீர் இருப்பு 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 3 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.
3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3004 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் 19.96 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் புழல் ஏரிக்கு வினாடிக்கு 275 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 91.03 சதவீத கொள்ளவுடன் 3 டிஎம்சி தண்ணீர் நிரம்பி உள்ளதால் புழல் ஏரி கடல் போல காட்சி அளிக்கிறது.
