×

ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ‘வன்தாரா’ என்ற பெயரில் வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் ஆனந்த் அம்பானி இந்த மையத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த மையத்தை 2024ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இங்கு 43 வகை உயிரினங்களில், 2 ஆயிரம் வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. 200க்கும் அதிகமான யானைகளை மீட்டெடுத்து பராமரித்து வருகிறது. இதையடுத்து இங்குள்ள யானைகள் சட்டவிரோதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டவை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய பல்வேறு உயிரினங்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வந்தாரா மையத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை கைப்பற்றி வனத்தில் சுதந்திரமாக விடுவிக்க வேண்டும். அதேப்போன்று யானைகள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும். வந்தராவில் வளர்க்கப்பட்டு வரக்கூடிய விலங்குகள் அனைத்தும் மறுவாழ்வு என்ற பெயரில் சுமார் 1.5 லட்சம் விலங்குகள் மற்றும் பறவைகள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளன. அதில் பல பறவைகள், யானைகள் உயிரிழந்துள்ளன. எனவே வந்தாராவில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைளை விசாரிக்க உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, யானைகளை சட்டவிரோதமாக சிறைபிடித்தது மற்றும் பிற குற்றச்சாட்டுகளை விசாரிக்க முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் தலைமை தாங்குவார். மேலும், இந்த பொதுநல வழக்கில், வரும் செப். 12ம் தேதிக்குள் இக்குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Vandara Zoological Center ,Reliance Foundation ,Delhi ,Vantara Zoological Centre ,Wildlife Rescue and Rehabilitation Centre ,Vandara ,Jam City, Gujarat ,Reliance ,
× RELATED ஓடிபி இல்லாமல் ஹேக்கிங் வாட்ஸ்...