×

கொல்லிமலை வட்டாரத்தில் ஆடிப்பட்ட நெற்பயிர் விளைச்சல் அமோகம்

சேந்தமங்கலம் : கொல்லிமலை வட்டாரத்தில் ஆடி மாதத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் வேர் பிடித்து பசுமையாக காட்சியளிக்கிறது. கொல்லிமலை வட்டார பகுதியான அரியூர் நாடு, வாழவந்தி நாடு, தின்னனூர் நாடு ஆகிய ஊராட்சியில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நெல் நடவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே வயல்களில் உழவுப் பணி மேற்கொண்டு, இயற்கை உரமாக வனப்பகுதியில் உள்ள பசுந்தலைகளை வெட்டி வந்து அதனை அடி உரமாக போட்டனர்.

ஒரு மாதத்திற்கு மேலாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஊற்று நீரை வயலில் தேக்கி, 5 முறை மாடுகளை கொண்டு உழவு ஓட்டி ஆடி மாதத்தின் தொடக்கத்தில் வயலில் ஒரு ஒதுக்குப்புறத்தில் விதை நெல்லை கொண்டு நாற்று விட்டனர்.

பின்னர் நாற்றுகளை பிடுங்கி கூலி ஆட்களை வைத்து நடவு செய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொல்லிமலை வட்டாரத்தில் நல்ல மழை பெய்ததால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் வேர் பிடித்து பசுமையாக காட்சியளித்து வருகிறது.

இதனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வயல்வெளிகள் பசுமையாக காட்சியளித்து வருகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆடி மாதம் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதில்லை. இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நெற்பயிர்கள் ஐப்பசி மாதம் அறுவடைக்கு வரும். இதனை அறுவடை செய்து இயந்திரத்தை பயன்படுத்தாமல் மாடுகளைக் கொண்டு தாம்படித்து நெல்லை பிரித்தெடுத்து, அதனை விற்பனை செய்யாமல் தங்களின் குடும்ப தேவைக்கு மட்டுமே அரிசியாக பயன்படுத்திக் கொள்வோம் என்றனர்.

Tags : Kollimalai district ,Aadi ,Ariyur Nadu ,Vazhavanthi Nadu ,Thinnanur Nadu ,Aadi… ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...