*குன்னூர் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
குன்னூர் : குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களை அகற்றுவதற்கு நகராட்சியினர் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் பழைய வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.
குறிப்பாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி மற்றும் குன்னூர்- ஊட்டி சாலையில் உள்ள சாமண்ணா பூங்கா போன்ற பகுதிகளில் உள்ள பிரதான சாலையை ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக ஆப்பிள்பீ, டி.டி.கே சாலை, வண்ணாரப்பேட்டை சாலை, ஓட்டுப்பட்டறை சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பழைய வாகனங்களை சாலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுதவிர குன்னூரில் உள்ள முக்கிய போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிகளில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதில் இருசக்கர வாகனங்கள், மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து குன்னூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஸ் கூறுகையில், ‘‘குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்கள் ஆகியவற்றில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு இடையூறும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும், அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும், பொது சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது.
அதனைத் தடுத்திடும் வகையில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, நகராட்சியினர் முறையாக நோட்டீஸ் வழங்கி, தகவல் அளித்து அப்புறப்படுத்துவதற்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் வாகன உரிமையாளர்கள் அகற்றப்படாத வாகனங்களை குன்னூர் நகராட்சியினர், குன்னூர் நகர காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என கூறினார்.
இதனிடையே குன்னூர் நகராட்சியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள பயன்பாட்டில்லா வாகனங்கள் அகற்றப்படும் என்று உறுதியளித்து, தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போதுவரை உபயோகமில்லாத வாகனங்கள் அகற்றப்படாததற்கு காரணம் என்னவென்று? பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
