×

திமுக அரசின் திட்டங்களை பார்த்து பொறுக்க முடியாமல்தான் ஒன்றிய பாஜ அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

சென்னை: திமுக அரசின் திட்டங்களை பார்த்து பொறுக்க முடியாமல்தான் ஒன்றிய பாஜ அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பகுதி, ஒன்றியம், வட்டம், கிளை மற்றும் பாகங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. இதில் திமுக இளைஞர் அணிச்செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தினார்.அப்போது அவர் பேசியதாவது:

நம் திட்டங்களைப் பார்த்து இன்றைக்கு வட இந்தியாவே பாராட்டிக்கொண்டு இருக்கிறது. ஆனால், இதைப் பொறுக்க முடியாமல்தான் ஒன்றிய பாஜ அரசு, நம் அரசிற்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற ஒரு சிறப்பான முன்னெடுப்பை தலைவர் அறிவித்தார். இன்றைக்கு `ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பின் மூலமாக 2 கோடி உறுப்பினர்களை திமுகவில் இணைத்து இருக்கிறோம். இதை பார்த்துதான், அதிமுகவுக்கு பயம் வந்துவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு எங்குச் சென்று பேசினாலும், தலைவர் பற்றியும், ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தைப் பற்றியும்தான் பேசுகிறார்.

அதிமுக-பா.ஜ. கூட்டணி திரும்பவும் வந்தால், தமிழ்நாட்டுக்குள் மீண்டும் என்னென்ன வரும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். தமிழ்நாட்டிற்குள் இந்தி திணிப்பு வரும். தமிழ்நாட்டிற்கு தொகுதி மறுவரையறை வந்துவிடும். புதியக் கல்விக்கொள்கை வந்துவிடும். ஆகவே, பாஜ, அதிமுகவை வீழ்த்துவதற்கான போரில், நம் இளைஞர் அணி முன்வரிசையில் நிற்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் நீங்கள் அத்தனைபேரும் களத்தில் இறங்கி, மக்களைச் சந்தித்து தேர்தல் பணியை இன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, காரப்பாக்கம் கணபதி, பகுதி செயலாளர் நொளம்பூர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Union BJP government ,DMK government ,Deputy ,Chief Minister ,Udhayanidhi ,Chennai ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Virugambakkam ,Maduravoyal ,Chennai South district ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...