சென்னை: சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி மாநகராட்சியில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகம் அருகில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்த உத்தரவிட்டு தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் சென்னையில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அல்லது எழும்பூர் மூர்மார்க்கெட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக் கோரி கடந்த 14ம் தேதி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாகவும், தன்னுடைய மனுவை பரீசிலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி, உழைப்போர் உரிமை இயக்கத்தின் பொருளாளர் மோகன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் என்பது தேவையா என கேள்வி எழுப்பி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
