சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லக்கண்ணு கடந்த 22ம் தேதி, வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. மேலும், 100 வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்னைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க, நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அந்த தனியார் மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மூத்த மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர். நல்லக்கண்ணு உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகமருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணி யன், முத்தரசன், வைகோ, திருமாவளவன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் நல்லக்கண்ணுவிடம் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர்.
* ‘பார்க்க வருவதை தவிருங்கள்’
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு தீவிரச் சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது உடல் நிலை சீராகியுள்ளது. 2 நாளில் குணமடைந்து வீடு திரும்புவார் என கூறும் மருத்துவர்கள், தற்போது அவரை நேரில் காண்பதற்கு சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கு நேரில் வருவதை தவிர்த்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே, அனைவரும் மருத்துவமனைக்கு நேரில் செல்வதை தவிர்த்து உதவ கேட்டுக்கொள்கிறோம்.
