×

சிறு,குறு தொழில் முனைவோர், விவசாயிகள் நலனுக்காக எத்தனை அழுத்தம் வந்தாலும் பரவாயில்லை: அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலுக்கு மத்தியில் பிரதமர் மோடி அறிவிப்பு

அகமதாபாத்: சிறு,குறு தொழில் முனைவோர், விவசாயிகள் நலனுக்காக எத்தனை அழுத்தம் வந்தாலும் தாங்கிக்கொள்வோம் என்று பிரதமர் மோடி பேசினார். இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இந்த சூழலில் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு கூறியதாவது: இன்று உலகில், அனைவரும் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். இந்த அகமதாபாத் நிலத்திலிருந்து, மகாத்மா காந்தியின் நிலத்திலிருந்து, எனது சிறு தொழில்முனைவோர், எனது சிறு கடைக்காரர் சகோதர சகோதரிகள், எனது விவசாய சகோதர சகோதரிகள், எனது கால்நடை வளர்ப்பு சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதைச் சொல்கிறேன். அது சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் அல்லது எனது நாட்டின் கால்நடை பராமரிப்பாளர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும், நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

உங்கள் நலன்கள் மோடிக்கு மிக முக்கியமானவை. சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட எனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், தாங்கும் வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம். இந்தியா இன்று குஜராத்திலிருந்து நிறைய ஆற்றலைப் பெறுகிறது. இதற்குப் பின்னால் 20 ஆண்டுகளுக்கு மேலான கடின உழைப்பு உள்ளது. 60 முதல் 65 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சி இறக்குமதி மோசடிகளில் ஈடுபடுவதற்காக நமது நாட்டை மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கச் செய்தது.

ஆனால் இந்தியா சுதேசியாக இப்போது முன்னேறுகிறது. சுழல் சுக்கரத்தால் இயக்கிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர், சுதேசிக்காக அழுத்தம் கொடுத்த சுதந்திர இயக்க நாயகன் மகாத்மா காந்தி ஆகியோரின் பாதையில் நடப்பதன் மூலம் இந்தியா அதிகாரம் பெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நமது வீரர்களின் துணிச்சலையும், உறுதியையும் வெளிப்படுத்தியது. இன்று, பயங்கரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும், நாங்கள் விட்டுவைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

* உள்ளூர் பொருட்களை மட்டுமே விற்கும் பெயர் பலகை வேண்டும்
பிரதமர் மோடி பேசுகையில்,’ சுதேசி பொருட்களை பரவலாகப் பயன்படுத்த வேண்டும். நாம் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தைப் பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வெளியே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனைக்கு வைத்து இருப்பதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும். இப்போது நவராத்திரி, விஜய் தசமி (தசரா), தந்தேராஸ், தீபாவளி என அனைத்து விழாக்களும் வரிசையாக வருகின்றன. இவை நமது கலாச்சாரத்தின் கொண்டாட்டங்கள், ஆனால் அவை தன்னம்பிக்கை கொண்டாட்டங்களாகவும் இருக்க வேண்டும்.

எனவே, நம் வாழ்வில் ஒரு மந்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் ஒருமுறை உங்களிடம் வலியுறுத்த விரும்புகிறேன், அது: நாம் எதை வாங்கினாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, அது இந்தியாவை பூர்வீகமாக கொண்டதாக இருக்கும் என்பதுதான். மற்ற நாடுகளிலிருந்து பெறப்படும் பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்கும் வணிகங்களை ஊக்குவிக்கிறேன். இந்த சிறிய ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நமது நாட்டின் முன்னேற்றத்தையும் செழிப்பையும் இயக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்’ என்றார்.

Tags : Modi ,US ,Ahmedabad ,India ,Gujarat… ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது