×

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவு ரத்து: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978ம் ஆண்டில் பி.ஏ பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரின் விவரங்களை ஒன்றிய தகவல் ஆணையத்திடம் நீரஜ் என்பவர் கேட்டிருந்தார். அதனை பரிசீலனை செய்த ஆணையம் குறிப்பிட்ட தகவலை வழங்குமாறு கடந்த 2016ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் தரப்பில் கடந்த 2017ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில்,” பிரதமர் நரேந்திர மோடி தொடர்புடைய பட்டப் படிப்பு ஆவணங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்க தயார். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர்பு இல்லாத ஒரு நபரின் ஆய்வுக்காக ஆவணங்களை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.மேலும் தகவல் அறியும் உரிமையை விட ஒரு தனிப்பட்ட நபரின் ஆவணங்களின் உரிமை உயர்வானது என்றதோடு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனிப்பட்ட விவரங்களை யாரும் கேட்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் 8 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சச்சின் தத்தா நேற்று தீர்ப்பை வழங்கினார். அதில், ‘‘ பட்டபடிப்பு சான்று என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். அதை வெளியிட வேண்டும் என்று கோருவது பொது நலன் ஆகாது. பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தார். இதேப்போன்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாரா? என்பதற்கான கல்வி ஆவணங்களை வழங்க சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவையும் நீதிபதி சச்சின் தத்தா நேற்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

* புரிந்துகொள்ள முடியவில்லை காங்கிரஸ் கருத்து
காங்கிரஸ் பொதுச் செயலாளர், தகவல் தொடர்புப் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ அனைவரின் கல்விப் பட்ட விவரங்கள் எப்போதும் பொதுவில் இருக்கும்போது பிரதமர் மோடியின் கல்விப் பட்ட விவரங்கள் ஏன் முழுமையான ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கள் உறுதியான எதிர்ப்பையும் மீறி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்ததற்கு இதுவே தற்செயலான காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Delhi High Court ,PM Modi ,New Delhi ,Neeraj ,Union Information Commission ,Delhi University ,Modi ,
× RELATED 2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!