×

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் சரமாரி கேள்வி: பொய் வழக்கு போட்ட அமைச்சருக்கு எத்தனை ஆண்டு சிறைவிதிக்கப்பட வேண்டும்?

புதுடெல்லி: ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அமித்ஷாவுக்கு, கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி நடத்தியது தான் இந்த மசோதாவை தாக்கல் செய்ய முக்கிய காரணம் என்றார். அவரது குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் நேற்று பதில் அளித்துள்ளார்.

அதன் விவரம்: கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டு, அவர்களின் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, அவர்களை அமைச்சராகவோ, துணை முதல்வராகவோ அல்லது முதல்வராகவோ ஆக்கினால், அத்தகைய அமைச்சரோ, பிரதமரோ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? அத்தகைய நபருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும்? ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்? அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக என்னை பொய் வழக்கில் சிக்க வைத்து மத்திய அரசு என்னை சிறைக்கு அனுப்பியபோது, ​​நான் 160 நாட்கள் சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்தினேன்.

டெல்லியில் கடந்த 7 மாதங்களாக ஆட்சியில் உள்ள பாஜ அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அந்த சிறை அரசாங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் மக்களால் நினைவுகூறப்படுகின்றன. சிறை அரசாங்கத்தின் போது, டெல்லியில் ​​மின்வெட்டு இல்லை, தண்ணீர் தட்டுப்பாடு இல்லை, மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் கிடைத்தன, இலவச பரிசோதனைகள் நடத்தப்பட்டன, தற்போது ஒரே ஒரு மழையில் டெல்லி இவ்வளவு மோசமான நிலையில் இருப்பதுபோல் அப்போது இல்லை, தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

* அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்
ஆம் ஆத்மி தலைவர் அனுராக் தண்டா கூறுகையில்,’ டெல்லி முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்குவது பாஜவின் சதி என்பதை பாஜவும் அமித் ஷாவும் இப்போது தெளிவுபடுத்தியுள்ளனர். அவர் ராஜினாமா செய்திருந்தால், மற்ற மாநிலங்களிலும் இதே விஷயத்தை முயற்சித்திருக்கலாம். அவர்கள் ஒரு சர்வாதிகாரத்தை கொண்டு வர விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆம் ஆத்மி தலைவர் சத்யேந்தர் ஜெயினை ஆதாரமின்றி மூன்று ஆண்டுகள் சிறையில் வைத்திருந்ததற்காக அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : Kejriwal ,Amit Shah ,PM ,New Delhi ,Amit Shah.… ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது