பெங்களூரு: தர்மஸ்தலாவில் கண்டெடுக்கப்பட்டது என்று கூறி நீதிமன்றத்தில் புகார்தாரரால் ஒப்படைக்கப்பட்ட மண்டை ஓடு 40 ஆண்டு பழமையானது என்று தடயவியல் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதை ஆய்வகம் ஒன்றில் இருந்து வாங்கியதும் அம்பலமாகி உள்ளது. தென்கனரா மாவட்டம், பெல்தங்கடி தாலுகா, தர்மஸ்தலா கிராமத்தில் பல பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக மண்டியா மாவட்டம், சிக்கபள்ளி கிராமத்தை சேர்ந்த சின்னய்யா என்பவர், பெல்தங்கடி மாவட்ட ஜெ.எம்.எப்.சி. நீதிமன்ற நீதிபதியின் முன் வாக்கு மூலம் கொடுத்தார்.
அப்போது, புதைக்கப்பட்ட சடலம் ஒன்றின் மண்டை ஓட்டை தானே தோண்டி எடுத்ததாக கூறி அதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதை தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தர்மஸ்தலா புகார் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பதற்காக கூடுதல் போலீஸ் டிஜிபி பிரணாவ் மொஹந்தி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிடப்பட்டது.
இந்த குழுவில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள், 20 போலீஸ் அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தவிர தடயவியல் நிபுணர்கள், டாக்டர்கள், உடல் கூறு பரிசோதனை செய்வோர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் புகார்தாரர் சின்னய்யா காட்டிய 17 இடங்களில் உடல்கள் தோண்டும் பணி 20 நாட்கள் நடத்தப்பட்டது. ஆனால் புகார்தாரர் கூறியபடி எந்த பெண்ணின் உடலும் கண்டெடுக்கப்படவில்லை. பல கோடி செலவு செய்தும், உண்மையான சம்பவம் உறுதியாகாமல் இருந்ததால், வேறு வழியில்லாமல் புகார் கொடுத்த சின்னய்யாவை சிறப்பு புலனாய்வு படையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையில் நீதிமன்றத்தில் சின்னய்யா ஒப்படைத்த மண்டை ஓடு தடயவியல் பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்திற்குமுன் அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்து அனுப்பியுள்ள அறிக்கையில், அது 40 ஆண்டுக்கு முன் இறந்தவரின் மண்டை ஓடு என்றும், அதில் வார்னிஷ் பூசப்பட்டிருப்பதால், மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஒன்றில் இருந்து அது வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
