×

குளத்தில் தடையை மீறி இளம்பெண் ரீல்ஸ் குருவாயூர் கோயிலில் இன்று பரிகார பூஜைகள் நடத்த முடிவு: தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயில் குளத்தில் தடையை மீறி இளம்பெண் ரீல்ஸ் எடுத்ததை தொடர்ந்து இன்று பரிகார பூஜைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதல் மதியம் வரை தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வளாகத்தில், வீடியோ, போட்டோ எடுக்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்துக்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்கள் செல்லவும் தடை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், இந்த தடையை மீறி ஜாஸ்மின் ஜாபர் என்ற இளம்பெண் கோயில் குளத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

இது தொடர்பாக குருவாயூர் கோயில் நிர்வாக அதிகாரி அருண்குமார் போலீசில் புகார் செய்தார். திருவிழா காலங்களில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறும் புனிதமான குளத்தில், வேற்று மதத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய கால்களை கழுவியும், குளத்தின் படிக்கட்டுகளில் நின்று கொண்டு போஸ் கொடுத்தும் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஜாஸ்மின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இவர் மீது குருவாயூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே ஜாஸ்மின் ஜாபர் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் குருவாயூர் கோயிலில் பரிகார பூஜைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மதியம் வரை பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதனால் இன்று மதியம் வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Tags : Guruvayur ,Thiruvananthapuram ,Guruvayur temple ,Guruvayur Krishnan temple ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...