×

விநாயகர் சதுர்த்தி, தொடர் முகூர்த்தத்தால் செம மவுசு; வாழை இலை விலை 4 மடங்கு உயர்வு

திருப்புவனம்: விநாயகர் சதுர்த்தி, தொடர் முகூர்த்தத்தால் வாழை இலை விலை 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது. 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.1,500க்கு விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் நெல்முடிகரை, புதூர், கலியாந்தூர், நயினார்பேட்டை, வெள்ளக்கரை, திருப்பாச்சேத்தி, கானூர், கல்லூரணி, மாரநாடு, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நாட்டு வாழை, ஒட்டு, முப்பட்டை, பச்சை, ரஸ்தாளி, பூவன் உள்ளிட்ட பலவகை வாழைகள் இருந்தாலும் இப்பகுதியில் முப்பட்டை மற்றும் ஒட்டு ரக வாழைகளே அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாழை நடவு செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியை தொடங்கியுள்ளனர். வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மேலும், 27ம் தேதி தொடங்கி 3 நாட்கள் முகூர்த்த நாட்களாக அமைந்துள்ளது. இதனால், தற்போது வாழை இலை விலை 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நெல்முடிகரையை சேர்ந்த விவசாயி வெள்ளிக்கரைகண்ணன் கூறியதாவது: இங்கிருந்து வாழை இலைகளை அறுத்து கட்டுகளாக விற்பனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300-க்கு மட்டுமே விலைபோனது. இந்நிலையில், தற்போது விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாத வளர்பிறையில் தொடர் முகூர்த்தம் காரணமாக வாழை இலைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.1,500 வரை சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால், வாழைக்கு இதுபோல் எப்போதும் நிரந்தர விலை கிடைப்பதில்லை. விஷேச நாட்கள் முடிந்துவிட்டால் விலை கடுமையாக சரிந்துவிடும் என்று தெரிவித்தார்.

Tags : Thiruppuvanam ,Sivaganga district ,Nelmudikarai ,Puthur ,Kaliyandur ,Nainarpet ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...