சென்னை: விஜயகாந்தின் மானசீக குரு எம்ஜிஆர் என்றும், புதிதாக வருகிறவர்களுக்கு அட்வைஸ் அவசியமில்லை, ஒரு முடிவோடு தான் வர்றாங்க என்று பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக்கை வெட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மகன்கள் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்பட கட்சியினர் உடன் இருந்தனர். தொடர்ந்து பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மக்களுக்கு உதவும் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயகாந்த் வழித்தடத்தை நாங்கள் அப்படியே பாலோ பண்றோம். அவர் என்ன எல்லாம் எங்களுக்கு சொல்லியிருக்கிறாரோ, அவர் என்னவெல்லாம் மக்களுக்கு உதவி செய்து இருக்கிறாரோ, அவர் எங்களை எல்லாம் எப்படி வழிநடத்தினாரோ, அதே வகையில் அவரின் காலடி தடங்களை தேமுதிகவினர் அனைவரும் பின் தொடருகிறோம். கும்மிடிப்பூண்டியில் தொடங்கி செங்கல்பட்டு வரைக்கும் முதல் கட்ட சுற்றுப்பயணம் நடந்திருக்கிறது. அந்த பயணம் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியிருக்கிறது. உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களை தேடி மக்கள் தலைவர் விஜயகாந்த் ரதயாத்திரை தேமுதிகவினருக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுப்பாக்கத்தில் விஜயகாந்துக்காக பார்த்து பார்த்து கட்டின வீடு. என்ன என்று தெரியவில்லை ரொம்ப தாமதமாகிவிட்டது. மிக விரைவில் அந்த இல்லம் கேப்டன் இல்லமாக திறக்கப்படும். விரைவில் அங்கே நாங்கள் குடியேறுவோம். இப்போது இருக்கும் இல்லத்தை அலுவலகமாக மாற்றி விடுவோம். கேப்டன் ரியல் எம்ஜிஆராக வாழ்ந்தவர். அதனால் தான் மக்களே வந்து கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்தார்கள். தனது மானசீக குருவாக எம்ஜிஆரை திரையுலகிலும் சரி, அரசியலில் உள்பட எல்லா இடத்திலும் முன்னிலைப்படுத்தினார். அதனால் தான் எம்ஜிஆரை நாங்கள் சொல்றோம்.
மற்றவர்கள் எம்ஜிஆரை பற்றி சொல்றாங்க என்றால், ஏன் சொல்றாங்க என்று நீங்கள் அவரிடம் தான் சொல்ல வேண்டும். வருகிறவர்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முடிவு பண்ணி தான் வர்றாங்க. நான் தலைகுனிந்தாலும் எனது தொண்டன் தலை குனிய வைக்க மாட்டேன் என்று எப்போதும் சொல்வார். அவர் மறைந்தாலும் கட்சியை தூக்கி நிறுத்தி கொண்டு தான் போய் இருக்கிறார். எங்கள் கூட இருந்து எங்களை வழிநடத்துவார் என்று நாங்கள் அனைவரும் முழுமையாக நம்புகிறோம். அது நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
