- திருமலை
- மஹந்தெரெட்டி
- தெலங்கானா மாநிலம்,
- விகாராபாத் மாவட்டம்
- கமரெட்டிகுடா
- சுவாதி
- மேட்செல் மாவட்டம்,
- பாப்பிங் பாலாஜி ஹில்ஸ்
திருமலை: தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், காமரெட்டிகுடாவைச் சேர்ந்தவர் மகேந்தர்ரெட்டி(30). பைக் டாக்சி ஓட்டுநர். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சுவாதி(22) என்பவரை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மேட்சல் மாவட்டம், போடுப்பல் பாலாஜி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுவாதி தற்போது கர்ப்பமாக இருந்தார். ஆனால் சுவாதி கர்ப்பமானது முதல் அவர் மீது சந்தேகமடைந்த மகேந்தர்ரெட்டி அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மகேந்தர் ரெட்டி, சுவாதியை சரமாரி தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டியுள்ளார். அவற்றை பிரதாபசிங்கரம் அருகே உள்ள முசி நதியில் வீசியுள்ளார். அதன்பிறகு மகேந்தர்ரெட்டி, சுவாதியின் அண்ணனுக்கு போன் செய்து உனது தங்கை தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதியின் பெற்றோர் கதறி அழுதபடி வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது சுவாதியின் உடலை காணவில்லை. மார்பு பகுதி மட்டும் கவரில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அப்பகுதியில் உள்ள கேமராவை ஆய்வு செய்தனர். இதில் மகேந்தர் ரெட்டி ஒரு பையில் சுவாதியின் வெட்டப்பட்ட சடலத்துடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் தலைமறைவான மகேந்தர்ரெட்டியை போலீசார் செல்போன் டவர் ஆதாரமாக கொண்டு தேடி வந்தனர். நேற்று அப்பகுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை மூசி நதிக்கு அழைத்து சென்று சுவாதியின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சுவாதியின் தாய் கூறியதாவது:
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் மகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதையறிந்த நாங்கள் காதலை கைவிடும்படி கூறினோம். ஆனால் மகேந்தர்ரெட்டி எனது மகள் நம்பும்படி பேசியுள்ளார். இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய எனது மகளை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 19 மாதங்கள்தான் ஆகிறது. எங்களை பார்க்க கூட அனுமதிக்கவில்லை. இருப்பினும் சுவாதி யாருக்கும் தெரியாமல் எங்களிடம் போனில் பேசி வந்தார். கடந்த சில நாட்களாக என் மகளை மகேந்தர்ரெட்டி சித்ரவதை செய்து வந்தார். எனது மகளைக் கொடூரமாக கொலை செய்வான் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
