×

நூற்றாண்டை கடந்த பாம்பன் பழைய ரயில் பாலம் அகற்ற டெண்டர்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: நூற்றாண்டை கடந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற, இந்திய ரயில்வே நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ஷெர்ஜர் தூக்குப்பாலம் கடந்த 24.2.1914 அன்று ரயில் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இதன்மூலம் பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் இந்தியாவின் பெருநிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டது. 1964ம் ஆண்டில் பாம்பன் தீவை தாக்கிய பெரும் புயல், சூறாவளியின்போது இந்த பாலம் கடுமையாகச் சேதமடைந்தது. இதனைச் சீராக்க விரிவான பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பழைய ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா 2014ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரம் தீவை ஆன்மீக சுற்றுலா நகரமாக மாற்றியதில் இந்த ரயில் பாலம் பெரும் பங்கு வகித்தது. கடந்த 2019ம் ஆண்டு பழைய பாம்பன் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில் நுட்பப் பிரச்னைகள் மற்றும் விரிசல்கள் காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலத்தை கட்டுவதற்கு திட்டமிட்டு இருந்த ரயில்வே நிர்வாகம், அதே ஆண்டில் பால கட்டுமான பணிகளை தொடங்கியது.

சுமார் 5 ஆண்டுகளில் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஏப்.16ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய ரயில் பாலத்திற்கு இணையாக பழைய ரயில் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து 110 ஆண்டுகள் பழமையான ரயில் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது இப்பாலத்தை அகற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் சுமார் ரூ.2.81 கோடி மதிப்பில் 4 மாதத்திற்குள் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் முதல் கடல் பாலமாக அமைந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ள நிலையில், இதனை நினைவு சின்னமாக மாற்றி ரயில் பயணிகள் பார்வையிட்டு செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Pamban ,Railway administration ,Rameswaram ,Indian Railways administration ,Shergar Suspension Bridge ,Pamban Sea ,Pamban Island… ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...