×

தரம் தாழ்ந்து பேசி வரும் விஜய்க்கு தேர்தலில் மரணஅடி கிடைக்கும்: திமுக மாநில வர்த்தக அணி செயலாளர் பேச்சு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகிகள் கூட்டத்தில் செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பேசும் போது விஜய்க்கு தேர்தலில் மக்கள் மரணஅடி கொடுப்பார்கள் என்றார். கிருஷ்ணகிரியில் திமுக வர்த்தக அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அன்பரசன் வரவேற்றார். மாநில செயலாளர் கவிஞர்.காசி முத்துமாணிக்கம் பங்கேற்று பேசினார்.

இக்கூட்டத்தில், தாயுமானவர் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. முதல்வர் குறித்து தரம் தாழ்ந்து பேசிய, தவெக தலைவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் அளித்த பேட்டி: மதுரையில் தவெக மாநாடு சினிமா படப்பிடிப்பு போல் நடந்துள்ளது. தமிழக முதல்வரை, தவெக தலைவர் விஜய் மிகவும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இது கண்டனத்திற்குரியது. இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், கட்சியில் மூத்த நிர்வாகிகள் யாருமின்றி, கட்சி ஆரம்பித்த உடனே, முதலமைச்சராக வேண்டும் என கனவில் இருக்கும் விஜய்க்கு, வருகிற தேர்தலில் பொதுமக்கள் மரணஅடி கொடுப்பார்கள்.

இதன் பிறகு நாட்டில் எந்த நடிகரும் முதல்வர் கனவுடன் அரசியலுக்கு வர மாட்டார்கள். பிரதமர் மோடி வருகிற தீபாவளி அன்று சிறு, குறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில், ஜிஎஸ்டியில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியை முழுமையாக நீக்கும் நாள் தான் வியாபாரிகள், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். அரசியலமைப்பு 130வது திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay ,DMK ,Krishnagiri ,Kasimuthu Manickam ,DMK business team ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை...