×

துணை ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்ற சுதர்சன் ரெட்டிக்கு வாக்கு: திருமாவளவன் வேண்டுகோள்

தூத்துக்குடி: இந்தியாவிற்கான தலைவர் பதவி என்பதால் துனை ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமாக சிந்தித்து ஜனநாயகத்தை காக்க சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். தூத்துக்குடியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று அளித்த பேட்டி: துணை ஜனாதிபதி தேர்தலை பாஜ அரசு தினித்துள்ளது. ஏற்கனவே துணைத்தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரை பதவி விலக வைத்து சிறை வைத்துள்ளனர்.

தன்கர் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. துணை குடியரசுத் தலைவருக்கே இந்த நிலை என்றால் குடிமக்களுக்கு என்ன நிலை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழர் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக ஆக்குவோம் என்று ஒரு சிலர் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இது தமிழ்நாட்டிற்கான தலைவர் பதவி அல்ல. இந்தியாவிற்கான தலைவர் பதவி. எனவே இதனை தமிழர் என்கிற அடையாளத்தை முன்னிறுத்துவதில் எந்த பலனும் கிடையாது.

பாஜவா, பாஜ அல்லாத ஜனநாயக சக்திகளா என்று தான் அணுக வேண்டியுள்ளது. சுதந்திரமாக சிந்தித்து அரசியலமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும். இதற்காக விசிக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். இந்த தேர்தல் வரும் வழக்கமான சராசரியான தேர்தலாக அல்லாமல் தன்கருக்கு நேர்ந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக சிந்தித்து சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sudarshan Reddy ,Vice Presidential election ,Thirumavalavan ,Thoothukudi ,India ,election ,VVS ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!