×

திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி பேச்சு: எங்கள் மொழி மீது யுத்தம் தொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்

சென்னை: திமுக மாணவர் அணி சார்பில் “எங்கள் கல்வி எங்கள் உரிமை” என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மாநில கல்வி கொள்கை கையேட்டையும் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு எனது பிள்ளையை நன்றாக படிக்க வைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற கனவு உள்ளது. ஆனால் ஒருபோதும் எங்களுக்கு பீகார், உத்தரபிரதேச, மத்திய பிரதேச கனவு இல்லை. காரணம் அந்த ஊர்களில் அவர்களின் மொழிகளை மறந்து இந்தியை படித்தார்கள். வேலை இல்லாது எனது ஊருக்கு பானிபூரி விற்க வருகிறார்கள். தமிழர்கள் ஒருபோதும் இந்தி படித்து வட மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை.

இவ்வளவு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாட்டை கட்டி எழுப்பியுள்ளோம். இந்த பாசிசக் கும்பல் தமிழர்கள் மீது மிகப்பெரிய ஆயுதமாய் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிற போது தமிழ்நாடு அனுமதிக்காது. வரலாற்றுக் காலத்தில் ஹிட்லரை ஸ்டாலின் வீழ்த்தினார். மோடி பாசிச தத்துவத்தை தாங்கி வருகிற போது எங்களது முதல்வர் அதை எதிர்க்கிற ஒரு ஆயுதமாய் கல்விக் கொள்கையை கொண்டு வந்திருக்கிறார். எந்த மொழி தேவைப்பட்டாலும் படிக்க தயார், ஆனால் எங்கள் மொழி மீது யுத்தம் தொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்.

Tags : DMK Student Union ,Rajiv Gandhi ,Chennai ,Tamil Nadu ,Anna Centenary Library ,Kotturpuram ,Rajiv Gandhi… ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!