சென்னை: குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதன் பின்னர் நிருபர்களிடம் சுதர்சன் ரெட்டி கூறியதாவது: நாட்டின் 60 சதவீதம் வாக்கெடுப்பு மக்களால் பிரதிநிதித்துவப்பட்டுள்ளேன். அரசியலில் எந்த சம்பந்தமும் இல்லாத நான் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளேன். வடமாநிலங்களில் பல இடங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளேன்.
இந்த நாட்டிற்கு சேவை செய்வது மட்டும்தான் எனது நோக்கமாக கொண்டு குடியரசு துணை தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். தமிழக முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு போட்டியாக களத்தில் இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டு வேட்பாளர். நான் பக்கத்து மாநில வேட்பாளராக வரவில்லை. தமிழகத்தை சேர்ந்தவனாக வந்துள்ளேன். ஒருபோதும் ராதாகிருஷ்ணனை ஆர்.ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர் என கூறவில்லை. அவர்களே அதனை கூறிக்கொள்கின்றனர்.
எந்த சித்தாந்தத்தையும் ஏற்காத நான்; அரசியலமைப்பை பின்பற்றும் ஜனநாயகவாதியாக உள்ளேன். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தான் குடியரசு துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து உறுப்பினர்களிடமும் ஆதரவு கேட்பேன். துணை சபாநாயகர் பதவி நிரப்பப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் அவை நிரப்பப்படாமல் இருக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழலால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நிருபர்களிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கூறியதாவது: இந்திய எதிர்க்கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள குடியரசு துணை தலைவர் வேட்பாளர் ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வாக்கு கேட்டு எதிர்க்கட்சிகளின் ஒருமித்த குரலாக வடிவமாக வந்துள்ளார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்களுக்கும் வேட்பாளரை அறிமுகம் செய்து முதலமைச்சர் வாக்கு கேட்டார். நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை சுதர்சன் ரெட்டி எடுத்துரைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
