சென்னை: இந்திய மாலுமிகள் கைவிடப்படுவதில் உலகளவில் முதலிடமாக உள்ளது. உலகளவில் வணிக கப்பல்களுக்கு மாலுமிகளை வழங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் பெருமை பெற்றாலும், “கைவிடப்பட்ட மாலுமிகள்” என்ற அவலப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2006 கடல்சார் தொழிலாளர் மாநாட்டின் வரையறையின்படி, கப்பல் உரிமையாளர்கள் தங்கள் குழுவினருடன் தொடர்பை துண்டித்து, அவர்களை திருப்பி அனுப்பாமல், உணவு, தங்குமிடம் மற்றும் சம்பளம் வழங்காமல் கைவிடுவது இந்த பிரச்னையை குறிக்கிறது.
இது இந்திய மாலுமிகளை மனித உரிமை நெருக்கடியில் தள்ளியுள்ளது. சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் 2024ம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளவில் 312 கப்பல்களில் 3,133 மாலுமிகள் கைவிடப்பட்டனர். இதில் 899 பேர் இந்தியர்கள். அதாவது மொத்த கைவிடப்பட்ட மாலுமிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள். கப்பல் உரிமையாளர்கள் மற்றும் முகவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக உள்ளன.
சில கப்பல் நிறுவனங்கள், பொருளாதார நெருக்கடி அல்லது மோசமான நிர்வாகத்தால், மாலுமிகளுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்திவிடுகின்றன. மேலும், கைவிடப்பட்ட மாலுமிகளை தங்கள் சொந்த செலவில் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு நிதி உதவி செய்யப்படுவதில்லை. இதனால், மாலுமிகள் மன உளைச்சல், பசி மற்றும் சமூகத் தனிமை போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.
அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளின் பங்கு இந்திய அரசு மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்புகள் இந்த பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்திய மாலுமிகளின் அவலநிலை, உலகளாவிய கடல்சார் தொழிலில் மனித உரிமைகளை மீறும் மோசமான நடைமுறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த நெருக்கடியை தீர்க்க, உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இல்லையெனில், ஆயிரக்கணக்கான இந்திய மாலுமிகள் தொடர்ந்து கடலில் தவிக்கும் அவலம் நீடிக்கும்.
