- எங்களுக்கு
- ஜெய்ஷங்கர்
- புது தில்லி
- எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றம்
- வெளியுறவு அமைச்சர்
- அதிபர் டிரம்ப்
புதுடெல்லி: எகனாமிக் டைம்ஸ் உலக தலைவர்கள் மன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகத்தை கையாளும் முறை வழக்கமான பாணியிலிருந்து மிகப்பெரிய விலகலாகும். இதனால் முழு உலகமும் இந்த பிரச்னையை எதிர்கொள்கிறது. இப்போது இருப்பதைப் போல எந்த அமெரிக்க அதிபரும் வெளியுறவுக் கொள்கையை பொதுப்படையாக மேற்கொண்டதில்லை. இது, இந்தியாவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முக்கிய பிரச்னை வர்த்தகம் மட்டும்தான். இரு தரப்பிலும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு சில சிவப்பு கோடுகள் இருக்கின்றன. அவை, நமது விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களின் நலன்கள்தான். இந்த பேச்சுவார்த்தையில் நாம் வெற்றி பெறுவோமா தோற்போமா என பலர் கேட்கின்றனர்.
இதற்கு பதில், இந்திய அரசு நமது விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது. அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். எந்த சமரசமும் செய்ய முடியாது. இந்தியா, அமெரிக்கா உறவு பாதிக்கப்பட்டதால், சீனாவுடன் இந்தியா நெருங்குவதாக கூறுவது தவறான பகுப்பாய்வு. இவ்வாறு அவர் கூறினார்.
* அமெரிக்க எம்பிக்களை சந்தித்த இந்திய தூதர்
இதற்கிடையே, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா கடந்த 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை அமெரிக்காவில் பல்வேறு முக்கிய எம்பிக்களை சந்தித்து, குறிப்பாக எதிர்க்கட்சி எம்பிக்களிடம், சமச்சீர் வர்த்தக உறவு குறித்து இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
* அமெரிக்கா தேடிய பின்லேடன் பாக்.கில் தானே இருந்தார்
அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் குறித்து ஜெய்சங்கர் கூறுகையில்,’ அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தான் மறைந்து இருந்தார். அதனால் அமெரிக்காவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளனர். அந்த வரலாற்றைப் புறக்கணித்த வரலாறும் அவர்களுக்கு உண்டு’ என்றார்.
