- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- அமலாக்க இயக்குநரகம்
- கர்நாடக
- பெங்களூரு
- கர்நாடக காங்கிரஸ்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே.சி. வீரேந்திரா
- சித்ரதுர்கா சட்டமன்றம்
பெங்களூரு: சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி.வீரேந்திரா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி.வீரேந்திரா. ஆன்லைன் சூதாட்டத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சித்ரதுர்காவில் 6 இடங்கள், பெங்களூருவில் 10 இடங்கள், ஹூப்பள்ளியில் ஒரு இடம், ராஜஸ்தானின் ஜோத்பூரில் 3 இடங்கள், மும்பையில் 2 இடங்கள், கோவாவில் 5 கேசினோக்கள் என சுமார் 30 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி.வீரேந்திரா, கிங்567, ராஜா567, பப்பீஸ்003, ரத்னா கேமிங் போன்ற ஆன்லைன் சூதாட்டத் தளங்களை நடத்திவருகிறார். எம்.எல்.ஏ வீரேந்திராவின் சகோதரர் கே.சி.திப்பேசாமி, டைமன்ட் சாஃப்டெக், டிஆர்எஸ் டெக்னாலஜிஸ் மற்றும் பிரைம்9 டெக்னாலஜிஸ் ஆகிய பெயர்களில் துபாயில் இருந்து வணிகங்களை நடத்தி வருவதாகவும், இந்த 3 நிறுவனங்களும் கால் சென்டர் சேவைகள் மற்றும் வீரேந்திராவின் கேமிங் வணிகம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
வீரேந்திரா மற்றும் அவரது சகோதரரின் வீடுகள், அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும், கோவாவில் உள்ள பப்பீஸ் கேசினோ கோல்ட், ஓஷன் ரிவர்ஸ் கேசினோ, பப்பீஸ் கேசினோ பிரைட், ஓஷன் 7 கேசினோ மற்றும் பிக் டாடி கேசினோ ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி மற்றும் 4 வாகனங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. 17 வங்கி கணக்குகள், 2 லாக்கர்கள், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால் எவையெவை எங்கெங்கு பறிமுதல் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி.வீரேந்திரா பணமோசடி வழக்கில் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் கைது செய்யப்பட்டார்.
கேசினோவை குத்தகைக்கு எடுப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி.வீரேந்திரா, தனது சகாக்களுடன் காங்டாக்கிற்கு சென்றிருந்த நிலையில், அங்கேயே வைத்து கைது செய்யப்பட்ட அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, பெங்களூருவில் உள்ள அதிகார வரம்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ரிமாண்ட் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் வீரேந்திராவின் சகோதரர்களான கே.சி.நாகராஜ் மற்றும் கே.சி.திப்பசாமி ஆகியோரது வீடுகளிலும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
என்னென்ன சிக்கின?
* ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் உள்பட ரூ.12 கோடி ரொக்கம்
* ரூ.6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள்
* சுமார் 10 கிலோ வெள்ளி நகைகள்
* 0003 என்ற ஒரே விஐபி எண்ணைக் கொண்ட மூன்று சொகுசு கார்கள்.
