கான்பூர்: உபி மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் வைஷ்ணவி சாகு(21). ஒரு கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மதுபன் பூங்கா அருகே வந்தபோது பிபிஏ மாணவியை தெருநாய்கள் கடித்து குதறின. இதில், அவரது கன்னத்தில் இருந்த சதையை நாய்கள் கிழித்து எறிந்தன. அவரது கன்னம் இரண்டு பகுதிகளாகப் பிளந்திருந்தது, மூக்கிலிருந்து சதையும் கிழிந்திருந்தது.
பலத்த காயமடைந்த மாணவியை முதலில் கன்ஷிராம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை. ஆழமான காயங்கள் இருப்பதால் வாயை திறக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். இதனால் அவருக்கு திரவ உணவு கொடுக்க டாக்டர்கள் கூறியுள்ளனர் என்று மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
