×

ஓடையில் ெவள்ளநீர் செல்வதால் இறந்தவர் உடலை மிதவை அமைத்து நீந்தி சென்று அடக்கம் செய்த கிராம மக்கள்

விருத்தாசலம், டிச. 11: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே மேலப்பாலையூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலை அங்குள்ள மணிமுத்தாற்றில் அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் மணிமுத்தாற்றுக்கும் மேலப்பாலையூருக்கும் இடையே கருவேப்பிலங்குறிச்சி காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் வரும் நீரோடை ஒன்று உள்ளது.
கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் நீரோடையை தாண்டி பொதுமக்கள் மணிமுத்தாறு பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் மேலப்பாலையூரை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி ரத்தினம்பாள்(90) என்பவர் நேற்று உடல்நிலை சரி இல்லாமல் உயிரிழந்தார். நீரோடையில் வெள்ள நீர் செல்வதால் மூதாட்டியின் உடலை மணிமுத்தாற்றில் அடக்கம் செய்ய முடியாமல் அவரது உறவினர்கள் தவித்தனர். பின்னர் மூதாட்டியின் உடலை லாரி டியூப்களால் ஆன மிதவையை தாயர் செய்து அதில் சடலத்தை வைத்து கட்டினர். இதன் பின்னர் ஓடை பகுதியில் இக்கரையில் இருந்து அக்கரை வரை கயிறு கட்டி, கயிற்றை பிடித்துக்கொண்டு நீரோடையில்  நீந்தி சென்றவாறு சடலம் உள்ள மிதவையை கொண்டு சென்று மணிமுத்தாற்றில் அடக்கம் செய்தனர்.இது குறித்து அப்பகுதியினர் கூறும்போது, ஒவ்வொரு மழையின் போதும் இதுபோன்று சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இந்த நீரோடையில் பாலம் கட்டித்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் எந்த நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் பாலம் கட்டி தர வேண்டும் என கூறினர்.

Tags : deceased ,
× RELATED ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2...