சென்னை: வாஜிராம் – ரவி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் ரவீந்திரன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாஜிராம் – ரவி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் பி.எஸ். ரவீந்திரன் மறைவுச் செய்தி அறிந்து வேதனையடைந்தேன். யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 40 ஆண்டுகளாகப் பாடமெடுத்து வந்த ரவீந்திரன் தனது ஆழ்ந்த, அகன்ற அறிவால் எத்தனையோ சாதனையாளர்களை உருவாக்கியுள்ளார்.
தற்போது தமிழ்நாடு அரசில் பணியாற்றி வரும் பல அதிகாரிகளும் இவரால் உருவாக்கப்பட்ட பாடக்குறிப்புகளால் பயன்பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்குப் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எளிமை, மாணவர்கள் மீது கனிவு, செய்யும் பணியில் தெளிந்த அறிவு ஆகிய பண்புகளால் ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய அவரது மறைவு இளைஞர் சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
