- துணை
- சுதர்சன் ரெட்டி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- இந்தியா கூட்டணி
- சென்னை
- ஜனாதிபதி
- துணை ஜனாதிபதி
- இந்தியா
- பாஜக
- தேசிய ஜனநாயகக் கூட்டணி…
சென்னை: இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர்கள் 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இதில் 2 பேரின் மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி 2 பேரும் தங்கள் கூட்டணி கட்சியின் தலைவர்களை சந்தித்து எம்பிக்களின் ஆதரவை திரட்ட தொடங்கியுள்ளனர். இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டில் இருந்து ஆதரவை திரட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னை வருகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை காலை 10.30 மணியளவில் சந்தித்து பேச உள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது திமுக எம்பிக்கள் தனக்கு ஆதரவு அளிக்குமாறு சுதர்சன் ரெட்டி வேண்டுகோள் விடுக்க உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு முடிந்த பின்னர் சுதர்சன் ரெட்டி தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.
அங்கு அவர் ஓய்வு எடுக்கிறார். மாலை 6 மணியளவில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்களுக்கு விருந்து அளிக்கிறார். தொடர்ந்து அவர்களின் ஆதரவை பெற உள்ளார்.
