*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி புகார்
வேலூர் : காட்பாடி பகுதியில் போலி பட்டாக்கள் மூலம் முறைகேடாக நிலம் விற்பனை செய்யப்படுவதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி புகார் தெரிவித்தார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் டிஆர்ஓ மாலதி, திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார், மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன், ஆர்டிஓ செந்தில்குமார், வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் உள்பட துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயி: நிலக்கடலை செடிகளில் களை எடுக்க கூலி ஆட்கள் கிடைக்கவில்லை. நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.
பிடிஓ: நூறுநாள் பணி செய்பவர்களின் பெயர்கள் ஒரு வாரத்திற்கு முன் பதிவு செய்துவிட்டால் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். விவசாய பணிக்கு தேவை என்றால் முன்கூட்டியே தெரிவித்தால் ஆட்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
விவசாயிகள்: காட்பாடி தாலுகாவில் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கொள்முதல் நிலையத்திற்காக ஏற்கனவே தாசில்தார், ஆர்டிஓ இடத்தை தேர்வு செய்தனர். அந்த பணியை உடனே தொடங்க வேண்டும்.டிஆர்ஓ: திறப்பதற்கான நடவடிக்கை தயார் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.விவசாயி: காட்பாடி, பள்ளிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளது. அதனை பிடிக்க வேண்டும்.
மாநகராட்சி கமிஷனர்: தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. பள்ளிகுப்பத்தில் முன்னுரிமை அளித்து தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யப்படும்.
விவசாயி: மாங்காய்க்கு ஆந்திரா, கர்நாடகாவில் டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினர். எனவே இங்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளோம். மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
வேளாண் வணிக அதிகாரி: இதுதொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விவசாயி: லத்தேரி அடுத்த செஞ்சியில் துணை மின்நிலையம் அமைக்கவேண்டும்.
மின்வாரிய அதிகாரி: காளாம்பட்டு பகுதியில் அமைக்க பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு விரைவில் வெளியாகும்.விவசாயி: கணியம்பாடி ஒன்றியத்தில் 24 ஏரிகள் உள்ளது. ஏரிக்கால்வாய்களை தூர்வாரவேண்டும். சீமை கருவேலமரங்கள் அதிகரித்துள்ளதால், ஏரிகளில் காட்டுப்பன்றிகள் குடிபுகுந்துவிட்டது. அதனை அகற்ற வேண்டும்.
திட்ட இயக்குனர்: இந்த ஆண்டு 70 இடங்களில் ஏரிக்கால்வாய் சீரமைக்கப்பட உள்ளது. கணியம்பாடி ஒன்றியத்தில் உள்ள கால்வாய்கள் சீரமைப்பு பட்டியலில் உள்ளதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: காட்பாடியில் போலி பட்டாக்கள் அதிகளவு உள்ளது. ஒரே சர்வே எண்ணை வைத்து பல உட்பிரிவு செய்து போலியாக பட்டா தயாரித்து அரசு நிலத்தை கூட வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். இதற்கு நடவடிக்கை வேண்டும்.டிஆர்ஓ: இதுதொடர்பாக ஆர்டிஓ, சர்வேயர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு சில துறை அதிகாரிகள் வரவில்லை. இதனால் வராத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கும்படி டிஆர்ஓ மாலதி உத்தரவிட்டார்.
வழக்குப் பதிய கலெக்டருக்கு உத்தரவு
சாலைகளில், பொது இடங்களில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மலட்டாற்றில் கலக்கும் கழிவுநீரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.
