×

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை திடீர் ரத்து

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனையடுத்து தேர்தலை சந்திக்கும் வகையில் தேர்தல் பணிகளை ஆளுங்கட்சியான திமுக முடுக்கி விட்டுள்ளது. இதே போல அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் தேசிய தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

கடந்த மாதம் 26ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடி திருவாதிரை, முப்பெரும் விழா​வில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில் வரும் 26ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளார் என்று கூறப்பட்டது. சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்வார் என்று தகவல் வெளியானது.

தரிசனத்தை முடித்து ​விட்​டு நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் கூறப்​பட்டது. இந்த நிலையில், வரும் 26ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவிருந்த நிலையில் அவரது சுற்றுப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றுப் பணி மற்றும் முக்கிய அலுவல்கள் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் வர பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : Modi ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu assembly ,DMK ,AIADMK ,Thaveka ,Naam Tamilar… ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...