சென்னை: இந்தியாவின் மதநல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கிற சக்திகளின் கொட்டம் அதிக நாள் நீடிக்காது. சாதி, மத பிரிவினை பார்க்காமல், எல்லோரையும் சமமாக நடத்துகின்ற பண்பை பள்ளி கூடங்களிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் குட்ஷெப்பர்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
1835ல் பிரான்ஸ் நாட்டில் பின்தங்கிய மக்களுக்கு கல்வியையும், வாழ்க்கையையும் வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், 1854ல் இந்தியாவுக்குள் நுழைந்து 110 கான்வெண்ட்டுகளை உருவாக்கினார்கள். 1925ல் இந்த பள்ளியை தொடங்கினார்கள். நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நூறு ஆண்டுகளில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் போல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து, முன்னேறி, உயர்ந்த பொறுப்புகளில் உட்கார்ந்து, அரசியல் தலைவர்களாக, நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, விளையாட்டு வீரர்களாக, தொழில் முனைவோர்களாக திறமையான கலைஞர்களாக புகழ் பெற்றிருக்கிறார்கள்.
இப்படி, லட்சக்கணக்கானோர் புகழ் பெறவேண்டும் என்றுதான் இந்த நிறுவனத்தை தொடங்கிய, புனித மேரி யூப்ரேசியா விரும்பியிருப்பார்கள். அவருடைய தொலைநோக்கு சிந்தனையை நனவாக்க உழைத்த அத்தனை பேரையும் நினைவுகூர்ந்து போற்ற வேண்டியது நம்முடைய கடமை. ஒரு காலத்தில் கல்வி என்பது, நமக்கு மறுக்கப்பட்ட ஒன்று. ஏராளமான போராட்டங்களுக்கு பிறகுதான் கல்வி கதவுகள் நமக்கு திறக்கப்பட்டது. இப்பொழுதும் கல்விக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள்.
கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என்று நிறைய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்போது கூட பள்ளி மாணவர்களுக்காகவே சிறப்பு பேருந்துகள் தொடங்கியிருக்கிறோம். நாம் அனைத்து தரப்புக்கும் இத்தனை திட்டங்களை தொடங்கி எல்லார்க்கும் எல்லாம் என்று செயல்படுகிறோம். ஆனால், இந்திய அளவில், பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு அரசே துணைபோகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் சிறுபான்மையினர் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது எல்லாம் நிரந்தரமல்ல. இந்தியாவின் மதநல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கின்ற சக்திகளின் கொட்டம் அதிக நாள் நீடிக்காது. சாதி, மத பிரிவினை பார்க்காமல், எல்லோரையும் சமமாக நடத்துகின்ற பண்பை பள்ளி கூடங்களிலேயே நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்க கூடாது என்று சொல்லுவார்கள்.
அப்படிதான், தமிழ்நாடு எப்போதும் சமத்துவ பூங்காவாக சகோதரத்துவத்துடன் திகழவேண்டும் என்றால், மாணவர்களான நீங்கள் இப்போதே அந்த எண்ணத்துடன் வளர்ந்தால்தான் முடியும். அதனால்தான் பள்ளி நிகழ்ச்சியில் கூட அரசியலும், அட்வைசும் பேச வேண்டியதாக இருக்கிறது. சமூக படிநிலையில் பலருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைப்பவர்கள், அதனால் வரும் திறமையை, வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். இதுதான், புனித மேரி யுப்ரேசியா போன்றவர்கள் ஆற்றிய தொண்டு.
இன்றைக்கு நல்ல பள்ளியில் படிக்கின்ற நீங்கள், அடுத்து, பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு என்று படித்து முன்னேற வேண்டும். இன்றைக்கு அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான அறிவை பெற, நிறைய வழிகள் இருக்கிறது. அதிலும் இப்போது செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி புது புரட்சியையே உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக, எல்லாவற்றுக்கும் ஏ.ஐ. இருக்கிறது, நாம் எதற்கு படிக்க வேண்டும் என்று நினைத்துவிடாதீர்கள்.
எந்த கண்டுபிடிப்பையும் நீங்கள் உங்கள் வளர்ச்சிக்காகதான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அது உங்களுடைய சிந்தனையை சிதைக்க அனுமதிக்க கூடாது. அதேபோல, உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கம்தான். அதுவே வாழ்க்கை இல்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் ரீல்ஸ் பார்ப்பதெல்லாம் உண்மை என்று நம்பிவிடாதீர்கள். லைக்ஸ், வியூஸில் கெத்து இல்லை. மார்க், டிகிரியில் தான் உண்மையான கெத்து இருக்கிறது. படிப்பதுடன் நன்றாக விளையாடுங்கள்.
உடல்நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆசிரியர்களும் இன்றைக்கு இருக்கின்ற பிள்ளைகளுக்கு ஏற்றது போல அப்கிரேட் ஆகவேண்டும். பெற்றோர்களும் ‘நம்முடைய பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள்?’ என்று காது கொடுத்து கேளுங்கள். மனதுவிட்டு பேசுங்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பயப்படாமல், நம்மிடம் தைரியமாக ஷேர் செய்ய வேண்டும். அந்த நம்பிக்கையை அவர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். பிள்ளைகளிடம், உன் பெஸ்ட் பிரண்ட் யாரு என்று கேட்டால், ‘எங்க அப்பா – அம்மா’ என்று சொல்லவேண்டும்.
அப்படி பழகுங்கள். கல்வி – நண்பர்கள் – சூழல் – இதுதான் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே, நல்ல ஆயராக இருந்து, பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் எழிலன், இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் ஜோ அருண், கோவா தலைமை ஆயர் கார்டினல் பிலிப்பி, ரோம் நாட்டை சேர்ந்த ஜோசிடா, மத்திய கிழக்கு இந்திய குட் ஷெப்பேர்டு குழும தலைமை புஷ்பா லூயிஸ், தாளாளர் அருணா ஜார்ஜ், முதல்வர் ஆனி தாமஸ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
