சென்னை: மாநில கல்விக் கொள்கையில் தொழில்நுட்ப கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் அமைந்துள்ள கோச்சடையான் டெக்னாலஜிஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம், மேக் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை நேற்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்குவதற்கு நிறைய தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும். அனைத்தும் தானியங்கி மயமாகி வரும் சூழலில், செயற்கை நுண்ணறிவு பங்கு முக்கியமானதாக இருக்கும். இந்த தொழில் நுட்பத்தை ஜனநாயக படுத்துவது அவசியம்.
செயற்கை நுண்ணறிவால் கல்வி துறை மிக பெரிய மாறுதல்கள் அடைய போகிறது. சேவை துறையில் நிர்வாக ரீதியில் மாற்றம் ஏற்படும். அடுத்த 20 வருடங்களில் இந்திய மக்கள் அதிக வேலையாட்களாக உலகெங்கும் இருப்பார்கள். தெற்கு மட்டுமே இந்தியாவில் வளர்ச்சியடைந்த பகுதியாக உள்ளது. அதற்கு காரணம் அனைவரையும் கல்வி பயில வைத்தது தான். கல்வி நிறுவனங்கள் புராகிராமிங், செயற்கை நுண்ணறிவு குறித்து கற்ற கொடுப்பதை தற்போதே தொடங்க வேண்டும். மின்னணு, தோல், ஜவுளி துறை வளர்ச்சி தான் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
