×

துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பிறகு என்ன செய்கிறார் ஜெகதீப் தன்கர்?

புதுடெல்லி: துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜெகதீப் தன்கர் டேபிள் டென்னிஸ் விளையாடுவதிலும், யோகா செய்வதிலும் நேரத்தைச் செலவிடுகிறார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது உடல் நிலையை காரணம் காட்டி பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அவரை யாரும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்த நிலையில் பதவியில் இருந்து விலகிய பிறகு ஜெகதீப் தன்கர், தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறார். அதே போல் டேபிள் டென்னிஸ் விளையாடுவதிலும் யோகா பயிற்சி செய்வதிலும் ஈடுபட்டுள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

* செப்.9ல் தேர்தல் உறுதி
துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியும் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது இருவேட்பாளர்களும் தாக்கல் செய்த 4 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளர் தெரிவித்தார். இதையடுத்து செப்.9ல் துணை ஜனாதிபதி தேர்தல் உறுதியாகி உள்ளது. நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது 68 வேட்புமனுக்களில், 46 வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்ஷன் ரெட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jagdeep Dhankhar ,Vice President ,New Delhi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது