×

மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்க்க கூடாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா சொல்கிறார்

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று முதல்வர் சித்தராமையா சட்டப்பேரவையில் பேசினார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு முன்மொழிவை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நேற்று சட்டப்பேரவையில் மேகதாது அணை குறித்து பேசிய முதல்வர் சித்தராமையா, வழக்கமான மழை பெய்யும் காலங்களில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 177.25 டிஎம்சி நீர் தான் திறந்து விட வேண்டும். ஆனால் அதைவிட அதிகமான நீரை திறந்துவிட்டிருக்கிறோம். அதனால் தான் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று கேட்கிறோம்.

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு ஏன் எதிர்க்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீர் மட்டுமே வழங்க வேண்டும். உச்சநீதிமன்றமும் அதைத்தான் கூறியிருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால் 67 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். அதிகமான மழை பெய்யும் இதுபோன்ற காலங்களில் கூடுதல் நீரை திறந்துவிடாமல் கர்நாடகாவால் 67 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். அதை குடிநீர்த் தேவைக்கும், மழையில்லாத வறட்சி காலத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புத் தர வேண்டும்’ என்று சித்தராமையா பேசினார்.

Tags : Tamil Nadu government ,Mekedadu dam ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,Mekedadu ,Tamil ,Nadu ,Karnataka state government ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது