×

மாங்காடு காவல் எல்லையை பிரித்து மவுலிவாக்கத்தில் காவல்நிலையம் திறப்பு: குற்ற சம்பவங்களை குறைக்க நடவடிக்கை

பல்லாவரம், ஆக.23: மவுலிவாக்கத்தில் புதியதாக அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மாங்காடு காவல் நிலையத்தின் எல்லைகள் பெரிதாக இருந்ததால் குற்ற வழக்குகளை சமாளிப்பதும், ரோந்து பணிகளில் ஈடுபடுவதும் காவலர்களுக்கு கடும் சிரமமாக இருந்து வந்தது. இதன் காரணமாக, மாங்காடு காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து மவுலிவாக்கம் புதிய காவல் நிலையம் அமைக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்காக ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது, மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அரசு கட்டிடத்தில் தற்காலிகமாக புதிய காவல் நிலையம் தொடங்கப்பட்டு, பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா நேற்று ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் தலைமையில் நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, புதிய காவல் நிலையத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது, தாம்பரம் – மதுரவாயல் புறவழிச் சாலைக்கு உட்பகுதியில் உள்ள கோவூர், பரணிபுத்தூர், தண்டலம், மவுலிவாக்கம், முகலிவாக்கம், மதனந்தபுரம் ஆகிய பகுதிகள் இந்த மவுலிவாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி இப்பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டால், விரைந்து செயல்பட்டு சுமுக தீர்வு காண முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Maulivakkam ,Mangadu ,Pallavaram ,Minister ,Tha.Mo.Anparasan ,Mangadu police station ,Avadi Police Commissionerate ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்