×

குன்னூர் அருகே சாலையோரத்தில் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட பதுங்கிய சிறுத்தை

குன்னூர், ஆக.22:குன்னூர் அருகே சாலையில் ஓரத்தில் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட நோட்டமிட்ட சிறுத்தையால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. சிலசமயங்களில் உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குன்னூர் அருவங்காடு பகுதிக்கு அடுத்துள்ள காரக்கொரை கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தது.

இதனை அவ்வழியாக சென்ற கிராம மக்கள் காரில் அமர்ந்தவாறே வீடியோ எடுத்துள்ளனர். மேலும், இரவு நேரத்தில் கிராமத்தின் நுழைவு வாயிலிலேயே சாலையோரத்தில் சிறுத்தை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  குறிப்பாக, அப்பகுதியில் உள்ள வளர்ப்பு பிராணிகளை நோட்டமிட்டு, அதனை வேட்டையாடி செல்லும் நிலை ஏற்படுவதால், அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Coonoor ,
× RELATED பூமியை நோக்கி வருகிறது வால் நட்சத்திரம்