மதுரை, ஆக. 22: மதுரை மாநகரின், காளவாசல் மேம்பாலத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள இரும்பு தகடுகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை நகர் பகுதியிலிருந்து தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு செல்ல காளவாசல் சிக்னலை கடப்பது அவசியம். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.54 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு, 2020ல் திறக்கப்பட்டது.
பாலம் கட்டப்பட்டபோது தூண்களின் இணைப்பில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன.
இதுபோன்ற இரும்பு தகடுகள் சேதமடைந்தாலோ அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நெடுஞ்சாலைத்துறையால் மாற்றப்படுவது வழக்கம். இதன்படி, காளவாசல் மேம்பாலத்தில் உள்ள தகடுகள் சேதமடைந்துள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே அவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதனுடன், நகரின் பல இடங்களில் முக்கிய மேம்பாலங்களில் உள்ள இரும்பு தகடுகள் சேதமடைந்து கிடப்பதாக கூறப்படுகிறது. அவற்றையும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
