×

விரைவில் இந்திய விண்கலம் மூலம் இந்தியர் விண்வெளிக்கு செல்வார்: சுபான்ஷூ சுக்லா நம்பிக்கை

புதுடெல்லி: விரைவில் இந்திய விண்கலம் மூலம் இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது என விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார். தனியார் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மிஷன், அமெரிக்கவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிராகன் விண்கலத்தை அனுப்பின.

இதில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். விண்வெளியில் 20 நாள் தங்கியிருந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஜூலை 15ல் பூமிக்கு திரும்பினார். கடந்த 17ம் தேதி அவர் இந்தியாவுக்கு வந்தார். இந்த நிலையில், சுபான்ஷு சுக்லா, நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘சர்வதேச விண்வெளி பயணத்தில் இருந்து பெற்ற முதல் அனுபவம் விலைமதிப்பற்றது, வேறு எந்த ஒரு பயிற்சியை விடவும் மிகவும் சிறந்தது. உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட இந்தியா மிகவும் சிறப்பானது. ஆக்ஸியம் 4 விண்வெளி திட்டத்தில் இருந்து கிடைத்த அனுபவம் இந்தியாவின் சொந்த திட்டமான ககன்யான் திட்டத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த ஆண்டில் இதில் நிறைய கற்று கொண்டேன். வெகு விரைவில் இந்தியாவின் சொந்த விண்கலம், ராக்கெட் மற்றும் நமது மண்ணில் இருந்து ஒருவர் விண்வெளிக்கு பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Tags : Subhanshu Shukla ,New Delhi ,Axiom Space Mission ,US ,NASA ,India ,ISRO ,European Space Agency ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...