×

திருமண பந்தத்தில் துணையை சார்ந்து இருக்க மாட்டேன் என்பது சாத்தியமற்றது: உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: திருமண பந்தத்தில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை சார்ந்து இருக்க விரும்பவில்லை என்று கூறுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் கணவனை பிரிந்து ஐதராபாத்தில் இரு குழந்தைகளுடன் வசிக்கும் மனைவி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

குழந்தையின் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க அனுமதிக்கும்படி கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விசாரணையின் போது, கணவனிடமிருந்து எந்த பராமரிப்பு செலவும் பெறவில்லை என்றும், யாரையும் சார்ந்திருக்க தான் விரும்பாதாதால் சிங்கப்பூர் செல்லாமல் ஐதராபாத்தில் வேலை செய்வதாகவும் மனைவி தரப்பில் கூறப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘யாரையும் சாராமல் சுதந்திரமாக இருக்க விரும்பினால் அவர்கள் திருமண பந்தத்தில் நுழையக் கூடாது. திருமணம் செய்த பிறகு கணவனும், மனைவியும் தங்கள் துணையை சார்ந்து இருக்க விரும்பவில்லை என கூற முடியாது.

அது சாத்தியமற்றது. திருமணம் என்றால் இரு ஆத்மாக்கள் ஒன்று சேரும் விஷயம். அதில் நீங்கள் எப்படி சுதந்திரமாக இருக்க முடியும். நாங்கள் பழைய நாகரீகத்துடன் வயதான நபர்களாக இருக்கலாம். ஆனால் துணையை சார்ந்து இருக்க மாட்டேன் என்பது சாத்தியமில்லை என்பதில் தெளிவாக உள்ளோம். நீங்கள் படித்தவர்களாக இருக்கிறீர்கள். குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்வது குறித்து யோசிக்க வேண்டும். எல்லா கணவன், மனைவிக்கும் இடையே ஏதாவது ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்யும்’’ என அறிவுரை கூறினர்.

Tags : Supreme Court ,New Delhi ,Hyderabad ,Singapore… ,
× RELATED பீகார் மாஜி முதல்வரான லாலுவுக்கு கண் அறுவை சிகிச்சை வெற்றி