×

குவியும் பாலியல் புகார் எதிரொலி கேரள இளைஞர் காங். தலைவர் விலகல்

திருவனந்தபுரம்: மலையாள சினிமா நடிகை ரினி ஆன் ஜார்ஜ். இவர் நேற்று முன்தினம், கேரளாவில் ஒரு முக்கிய அரசியல் கட்சியின் மக்கள் பிரதிநிதி சமூக வலைதளத்தில் தன்னிடம் ஆபாசமாக சாட்டிங் செய்ததாகவும், ஓட்டலுக்கு உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அரசியல் பிரமுகர் யார் என கூறமாட்டேன் என்ற அவர், அந்த நபர் குறித்த சில சூசகமான தகவல்களை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ராகுல் மாங்கூட்டத்தில் தான் அந்த நபர் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டது. இந்நிலையில் கண்ணூரை சேர்ந்த எழுத்தாளரான ஹனி பாஸ்கரனும் அவருக்கு எதிராக புகார் கூறினார். ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக காங்கிரஸ் மேலிடத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றன.

நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து ராகுல் மாங்கூட்டத்தில் தன்னுடைய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்தில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கம்யூனிஸ்ட், பாஜ கட்சிகள் அறிவித்துள்ளன. நேற்று பத்தனம்திட்டாவில் ராகுல் மாங்கூட்டத்தலின் வீட்டின் முன்பு கம்யூனிஸ்ட், பாஜ கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

* கட்டாய கருக்கலைப்பு புகார்
ராகுல் மாங்கூட்டத்தில் ஒரு இளம்பெண்ணுடன் நடத்திய சாட்டிங் விவரங்கள் நேற்று வெளியாகின. அதில் அந்த இளம்பெண்ணிடம் கருக்கலைப்பு செய்ய ராகுல் மாங்கூட்டத்தில் வற்புறுத்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்திய ராகுல் மாங்கூட்டத்தில் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ஷின்டோ செபாஸ்டியன் என்பவர் எர்ணாகுளம் போலீசிலும், குழந்தைகள் நல ஆணையத்திலும் புகார் செய்துள்ளார்.

Tags : Kerala Youth Congress ,Thiruvananthapuram ,Rini Ann George ,Kerala ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...