புதுடெல்லி: “வாக்காளர் பட்டியலை சரி செய்வதல்ல, ஜனநாயகத்தை அழிப்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள்” என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ஜனநாயகத்தை அழிப்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என காங்கிரஸ் சாடி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் தள பதிவில், “2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல்கள் ஏற்கனவே சரியான துல்லியத்துக்குமிக அருகில் இருப்பதாக கூறியது. பல்வேறு காரணங்களால் தகுதியுடைய பல குடிமக்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.
தேர்தல் ஆணையம், வாக்காளர்களை விலக்குவதில் கவனம் செலுத்தாமல் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஏராளமான வாக்காளர்கள் வாக்காளர் அட்டைகளை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்களை குறிப்பிட்டுள்ளனர். ஜனவரி 2025ல் பீகாரின் வாக்காளர் பட்டியல்களில் திருத்தம் நடத்த வேண்டிய கட்டாய தேவை இருப்பதாக தேர்தல் ஆணையம் நம்பவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் அதன் பிறகு என்ன மாறி விட்டது?” என கேள்வியுடன் குற்றம்சாட்டி உள்ளார்.
