×

அமரீந்தர் சிங் ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் தேர்வு: இன்று காலை பதவி ஏற்கிறார்

சண்டிகர்: அமரீந்தர் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் எம்எல்ஏக்கள் சரண்ஜித் சிங்கை ஒருமனதாக தேர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித்சிங் இன்று காலை பதவியேற்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, அமரீந்தர் சிங் முதல்வராக பதவியேற்றார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக, பாஜவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும், முதல்வர் அமரீந்தருக்கும் இடையே நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், சித்து ஆதரவு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அமரீந்தருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். சமீபத்தில் சித்துவுக்கு, மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அமரீந்தரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டுமென 50 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து, கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் கூட்டப்பட்ட நிலையில், அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியில் நடந்த சில நிகழ்வுகளால் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமரீந்தர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்யும் நடைமுறைகள் நேற்று தொடங்கின. கட்சியின் பொதுச் செயலாளரும், பஞ்சாப் மாநில பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத், கட்சியின் மத்திய பார்வையாளர்கள் அஜய் மக்கான், ஹரிஷ் சவுத்ரிஆகியோர் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தினர். இதில், மாநில முன்னாள் தலைவர் சுனில் ஜாகர், தற்போதைய மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. ஏற்கனவே, முதல்வரை தேர்வு செய்யும் விவகாரத்தில் கட்சி தலைவர் சோனியாவுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்படுவதாக நேற்று முன்தினம் நடந்த எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, டெல்லியில் சோனியா, ராகுல் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டன. அந்த சமயத்தில், ரந்தவா அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட அதிகம் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறப்பட்டன. ஆனால், தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக்க வேண்டுமென காங்கிரஸ் மேலிடமும், எம்எல்ஏக்களும் விரும்பினர். இதனால், திடீர் திருப்பமாக சரண்ஜித் சிங் சன்னி கட்சியின் சட்டப்பேரவை தலைவராகவும், புதிய முதல்வராகவும் அறிவிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில பொறுப்பாளர் ராவத் தனது டிவிட்டரில் வெளியிட்டார். அடுத்த 5 மாதத்தில் பஞ்சாப்பில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அதில் வெற்றி பெற்றால் தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக்குவோம் என பாஜ அறிவித்துள்ளது. அதற்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் இப்போதே தலித் சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங்கை முதல்வராக்கி உள்ளது. மேலும், பஞ்சாப் முதல்வராகும் முதல் தலித் தலைவர் என்ற பெருமையையும் சரண்ஜித் சிங் பெற்றுள்ளார்.இதையடுத்து, நேற்று இரவு சரண்ஜித் சிங், ராவத் மற்றும் சித்து உள்ளிட்டோருடன் சேர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ்பவனில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று காலை 11 மணிக்கு புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்க உள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக காங்கிரசில் நிலவி வந்த குழப்பநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.எல்லையை பாதுகாப்பார் முன்னாள் முதல்வர் அமரீந்தர் அளித்த பேட்டியில், ‘‘சரண்ஜித் சிங்குக்கு எனது வாழ்த்துக்கள். எல்லை மாநிலமான பஞ்சாப்பை பாதுகாப்பாகவும், எல்லையில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் மக்களை பாதுகாக்கவும் சரண்ஜித் சிங்கால் முடியும் என நம்புகிறேன்,’’ என்றார். அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கூறுகையில், ‘‘கட்சி மேலிடத்தின் உத்தரவை நான் வரவேற்கிறேன்’’ என்றார்….

The post அமரீந்தர் சிங் ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் தேர்வு: இன்று காலை பதவி ஏற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Samaranjit Singh ,Chief of ,Punjab ,Amarinder Singh ,Chandigarh ,Saranjit Singh Sunny ,Chief Minister ,State of ,Sharanjit Singh ,
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...