×

கொளத்தூர் சாய்வு தளத்திலிருந்து ரயில் நிலையம் வரை 246 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவு: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: கொளத்தூர் சாய்வு தளத்தில் இருந்து கொளத்தூர் ரயில் நிலையம் வரை 246 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், சென்னையில் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் (5.8 கி.மீ.), 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் (41.2 கி.மீ) அமைக்கப்படவுள்ளது.

5.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை பிரிவுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன. 5வது வழித்தடத்தில் 5.8 கி.மீ நீளம் கொண்ட சுரங்கப்பாதை பிரிவு மற்றும் 2 சாய்வுப் பாதைகள் டாடா பிராஜெட்ஸ் நிறுவனத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதற்கு ஜிகா நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது. வழித்தடம் 5ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை 246 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை கடந்த பிப்ரவரி 20ம் தேதி தொடங்கி நேற்று கொளத்தூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி 1.8 மீட்டர் மிக குறைந்த சுமை, 3.8 சதவீதம் செங்குத்தான சாய்வு மற்றும் அதிக போக்குவரத்துக்கு உட்பட்ட உள்வட்ட சாலையின் நடுவில் தரை பாதுகாப்புக்கான தேவை போன்ற அனைத்து சவால்களையும் கடந்து பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளது. நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இணை பொது மேலாளர் கார்த்திகேயன், டாடா பிராஜெட்ஸ் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ரமேஷ், திட்ட மேலாளர் நத்தபோங் கட்கேவ், பொது ஆலோசகர் நிறுவனத்தின் குழு தலைவர் இயன் வாட்சன், தலைமை பொறியாளர் உஸ்மான் ஷெரிப், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டாடா பிராஜெட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kolathur ,Chennai ,Chennai Metro Rail Company ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...