- துணை ஜனாதிபதி தேர்தல்
- ராதாகிருஷ்ணன்
- மோடி
- புது தில்லி
- தேசிய ஜனநாயக கூட்டணி
- மத்திய அமைச்சர்கள்
- அமித் ஷா
- ராஜ்நாத் சிங்
- ஜகதீப் தன்கர்
புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தார். ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் (68), இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் (79) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி முன்னிலையில் பாஜ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்திற்கு வந்த அவர் பிரேர்னா ஸ்தல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் பிற தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை பொதுச் செயலாளர் பி.சி. மோடியிடம் 4 வேட்புமனுக்களை அவர் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, தர்மேந்திர பிரதான், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராம் மோகன் நாயுடு, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர். தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பரிசோதித்த பின், ராதாகிருஷ்ணன் அங்கிருந்த பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் தேர்தல் அதிகாரி, பிரதமர் மோடியிடம் வேட்புமனுவின் ஒப்புதல் சீட்டை வழங்கினார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
* துணை ஜனாதிபதி வேட்பாளரின் வேட்புமனுவை குறைந்தபட்சம் 20 எம்பிக்கள் முன்மொழிய வேண்டும், 20 எம்பிக்கள் வழிமொழிய வேண்டும்.
* ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த 4 மனுக்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த அத்தனை எம்பிக்களும் முன்மொழிபவர்களாகவும், வழிமொழிபவர்களாகவும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
* பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் முன்னணி முன்மொழிபவர்களாக இருந்தனர்.
