சென்னை: முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80 சதவீதம் வரை அமலுக்கு வந்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து தொழில் துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார். சுற்றுப்பயணத்திற்கான தேதி இறுதி செய்யப்படவில்லை. TN Rising என்ற பெயரில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலும் TN Rising மாநாடு நடத்தப்பட உள்ளது.
வாகன உற்பத்தி துறையில் 100 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். 2024 முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80 சதவீதம் வரை அமலுக்கு வந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஆட்சிக்கு திமுக வந்தது முதல் தற்போது வரை 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. எந்த அரசும் செய்யாத சாதனையை திராவிட மாடல் அரசு செய்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின்பு தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி முன்னேறி வருகிறது. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வரப்படும். பல இடங்களை ஆய்வு செய்துவிட்டு வேறு வழி இல்லாமல்தான் பரந்தூரை தேர்ந்தெடுத்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
