×

திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது வேலூர் கூலிப்படையை கைது செய்ய தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பங்க் பாபு(47). இவர், கடந்த 3ம் தேதி திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் கொலை வழக்கில், பங்க் பாபு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, சிறையில் இருந்து ஜாமீனில் வந்திருந்தார். எனவே, இந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கொலையான பங்க் பாபுவின் மனைவி அளித்த புகாரிலும், கனகராஜ் குடும்பத்தினர்தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், 4 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, கனகராஜ் மனைவி ஞானசவுந்தரி, அவரது தாய் ராணி, தாய் மாமா சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(38), சிவராத்திரி மடத்தெருவைச் சேர்ந்த பார்த்தீபன்(40) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவரை கொன்றதால் பழிக்கு பழி வாங்க கூலிப்படைக்கு பணம் கொடுத்து கனகராஜின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் இந்த கொலையை நடத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதோடு, கூலிப்படைக்கு 50 லட்சம் பணம் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி, முதற்கட்டமாக ₹30 லட்சம் கொடுத்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதோடு, வேலூரைச் சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர்களை கைது செய்யும் பணியில் போலீசர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொலையில் ஈடுபட்ட 4 வாலிபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும், அதில் இரண்டு பேரை நெருக்கிவிட்டதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Tags : mercenaries ,Vellore ,murder ,real estate tycoon ,Thiruvannamalai ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...