ஒட்டன்சத்திரம், டிச. 10: ஒட்டன்சத்திரத்தில் ரயில்வே சப்வேயில் தேங்கி நிற்கும் மழைநீரால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் பழநி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்கு எதிரே, குழந்தைவேலப்பர் கோயில் செல்லும் அணுகுசாலையில் ரயில்வே மேம்பாலம் இருந்தது. இதனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றி விட்டு, விஸ்வநாதன்நகரில் ரயில்வே சப்வே அமைக்கப்பட்டது. இப்பாதை வழியாகத்தான் அருகேயுள்ள தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காய்கறிகளை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லவும், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்குள் செல்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். முன்பு மேம்பாலமாக இருந்ததால் போக்குவரத்திற்கு பாதிப்பின்றி இருந்து வந்தது. ஆனால் தற்போது மழை பெய்யும் போதெல்லாம் பெரும் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் சப்வேயில் சுமார் 20 அடிக்கு மேல் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் பாதையை பயன்படுத்த முடியாமலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும் வேறு பாதை எதுவும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறுகையில், பொதுவாக நீர்வழி தடங்களான ஆறு, ஓடை, வாய்க்கால் பகுதியில் பாலம் கட்ட வேண்டும். ஆனால் ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே இருந்த பாலத்தை அகற்றிவிட்டு, சப்வே அமைத்து சொதப்பியுள்ளனர்.
மலையிலிருந்து உற்பத்தியாகும் நீரை மறைத்து, சப்வே கட்டியுள்ளதால் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. மேலும் நீர் வெளியேறும் ஓடைகளை ரயில்வே நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ளது. இதனால் மழைநீர் உரிய குளங்களுக்கு செல்லாமல் இடையிலேயே வீணாகிறது. இதனால் மழை பெய்தும் பயனில்லாமல் போய்விடுகிறது. மழைநீர் அன்றாடும் தேங்குவதால் பல கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டியுள்ளது. இதுகுறித்து நாங்கள் ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் ரயில்வே துறையினர் கண்டும், காணாததுமாக இருந்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் ரயில்வே சப்வேயை அகற்றிவிட்டு, மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
