×

பொள்ளாச்சி சந்தைக்கு ஆந்திரா மாடுகள் வரத்து அதிகரிப்பு: ஆடி மாதம் நிறைவால் ரூ.2.30 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திர மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில், பொள்ளாச்சி சந்தைக்கு இந்த மாதம் துவக்கத்திலிருந்து மாடு வரத்து ஓரளவு இருந்தது. அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர். இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாடுகள் வந்தும் வரத்து குறைவாக இருந்தாலும், ஆந்திரா மாநிலத்திலிருந்து வழக்கத்தைவிட மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. சுமார் 1500க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டது.

ஆடி நோன்பு நிறைவு காரணமாக மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். அவர்கள், குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர். இதன் காரணமாக, விற்பனை விறுவிறுப்புடன் இருந்தது. கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதில், காளை மாடு ரூ.55 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.48 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரத்துக்கும், பசு மாடு ரூ.36 ஆயிரத்துக்கும், ஆந்திரா காளை மாடுகள் ரூ.70 ஆயிரம் வரையிலும், கன்று குட்டிகள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் என கடந்த வாரத்தை விட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் என கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரத்தில் ரூ.1.80 கோடிக்கு மாடு விற்பனை இருந்தது. ஆனால் நேற்று, ரூ.2.30 கோடிக்கு வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Andhra ,Pollachi market ,Pollachi ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka ,Pollachi cattle market ,Coimbatore district ,Kerala ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...