வேடசந்தூர்: அய்யலூரில் சாலையில் நடக்கும் வாரச்சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீண்டகாலமாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 9 மணி வரை ஆடு, கோழி சந்தை நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த வாரச்சந்தையில் ஆடு, கோழி தவிர காய்கறிகள், கிழங்குகள், மருத்துவ மூலிகை பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆடு, கோழி, காய்கறிகள், கிழங்கு வகைகள், மருத்துவ மூலிகை பொருட்கள் அதிகாலையில் விற்பனைக்கு வரும்.
இந்நிலையில் தனியார் வசம் இருக்கும் வாரச்சந்தை சம்பந்தப்பட்ட இடத்தில் நடைபெறாமல் சாலையிலேயே நடைபெறுகிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளி- கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ஊர்களுக்கு செல்பவர்கள் சம்பந்தப்பட்ட பேருந்துகளில் ஏறி குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட, பேரூராட்சி நிர்வாகங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து நீடித்து வரும் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: வாரச்சந்தை நடத்துபவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சந்தையை நடத்தினால் போக்குவரத்துக்கு இடையூறின்றி அனைத்து தரப்பினரும் வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.
ஆனால் வாரச்சந்தை நடத்துபவர்கள் அதிகாலை 3 மணிக்கு துவங்கி 9 மணி வரை சாலையிலே வாரச்சந்தை நடத்துவதால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டு மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். மேலும் மாதத்திற்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் வாரச்சந்தையில் போதிய அடிப்படை வசதிகளின்றி நடந்து வருகிறது. குறிப்பாக கழிப்பறை வசதி இல்லாததால் வாரச்சந்தைக்கு வருபவர்கள் சந்தையை சுற்றியே தங்களது இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் கடும் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாய நிலை நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வாரச்சந்தை பகுதியை ஆய்வு செய்து போக்குவரத்து இடையூறு, கழிப்பறை வசதி போன்றவற்றை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
