×

தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்காக தயாரிக்கப்பட்ட ‘டைம்லஸ் தமிழ்நாடு’ ஆவணப்படத்திற்கு தேசிய விருது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தயாரிப்பு குழு வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்காக தயாரிக்கப்பட்ட ‘டைம்லஸ் தமிழ்நாடு’ என்ற ஆவணப் படத்திற்கு 71வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் சிறந்த கலை, பண்பாடுக்கான படத்திற்கான ‘ராஜத்கமல்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பு குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த 2022ம் ஆண்டு சுற்றுலாத் துறையின் நிதி உதவியுடன் ‘டைம்லஸ் தமிழ்நாடு’ என்ற ஆவணப்படம் செலிபிரிட்டி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் காமக்யா நாராயண சிங் தலைமையில் தயாரிக்கப்பட்டது.

இந்த ஆவணப்படம் 2023ம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் திரைப்படங்கள் அல்லாத பிரிவின் கீழ் சிறந்த கலை, பண்பாடுக்கான ‘டைம்லஸ் தமிழ்நாடு’ என்ற ஆவணப்படமாக தேர்வாகி ‘ராஜத்கமல்’ என்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரமாண்ட கோயில்கள், அழகிய மலை சுற்றுலாத் தலங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற பல்வகைப்பட்ட சுற்றுலாத் தலங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. அனைத்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

இதுபோன்ற பல்வேறு குறும்படங்கள் சுற்றுலாத்துறை மூலம் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா சந்தைகள் மற்றும் விளம்பர முகாம்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்வின்போது, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் கவிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Tamil ,Nadu ,Tourism ,Mu. K. ,Stalin ,Chennai ,71st National Film Awards ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...