- துணை
- இந்தியா
- கூட்டணி
- சுதர்சன் ரெட்டி
- உச்ச நீதிமன்றம்
- பாஜக
- ராதாகிருஷ்ணன்
- புது தில்லி
- முன்னாள்
- இந்தியா கூட்டணி
- துணை ஜனாதிபதி தேர்தல்
- காங்கிரஸ்
- திமுக
- துணை ஜனாதிபதி
- ஜகதீப் தங்கர்
புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலக்குறைவு காரணமாக பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நாளையுடன் முடிகிறது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய பாஜ தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களமிறக்குவது என்பது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்கான அதிகாரம் கார்கேவுக்கு வழங்கப்பட்டது. அரசியல் சாராத ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய கார்கே, இந்தியா கூட்டணியின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை நேற்று மதியம் அறிவித்தார்.
இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகளின் கூட்டறியக்கையை வாசித்த கார்கே கூறியதாவது: சுதர்சன் ரெட்டி இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற, முற்போக்கான நீதிபதிகளில் ஒருவர். நீண்ட, புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையை கொண்டுள்ளார். இந்த துணை ஜனாதிபதி தேர்தல் ஒரு சித்தாந்த போர். நமது நாட்டின் சுதந்திர இயக்கத்தை மிகவும் ஆழமாக வடிவமைத்த மதிப்புகளையும், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் வேரூன்றிய மதிப்புகளையும் முழுமையாக பிரதிபலிப்பதால் எதிர்க்கட்சிகள் சுதர்சன் ரெட்டியை தங்களின் பொது வேட்பாளராக நிறுத்தி உள்ளன. சுதர்சன் ரெட்டி ஏழைகளுக்கு ஆதரவானவர். அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாத்தவர்.
இந்த மதிப்புகள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. எனவே இந்தத் தேர்தலை எதிர்த்துப் போராடுவது நமது ஒற்றுமையான, உறுதியான தீர்மானமாகும். இவ்வாறு அவர் கூறினார். சுதர்சன் ரெட்டிக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட இருக்கிறது. இதில், சுதர்சன் ரெட்டி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முறைப்படி அறிமுகம் செய்யப்படுவார். அதைத் தொடர்ந்து அவர் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார். ஆளும் பாஜ கட்சிக்கு வெற்றி பெறுவதற்கான போதிய எம்பிக்களின் பலம் இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
* சபாஷ் சரியான போட்டி
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க இருப்பதை குறிவைத்து பாஜ தனது வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்துள்ளது. இதற்கு சரியான போட்டியாக இந்தியா கூட்டணி சார்பில் தெலங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்தியா கூட்டணி செக் வைத்துள்ளது. இந்த 3 கட்சிகளும் ஏற்கனவே பாஜ வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* கடந்து வந்த பாதை
தற்போது தெலங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 1946ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி பிறந்தவர் சுதர்சன் ரெட்டி. இவர், தனது சட்டப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முடித்தார். 1971ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த இவர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ரிட் மற்றும் சிவில் வழக்குகளைக் கையாண்டார். நீதிபதியாவதற்கு முன்பு, இவர் ஒன்றிய அரசுக்காகக் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குச் சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
1993ம் ஆண்டு மே 2ம் தேதி சுதர்சன் ரெட்டி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார். பிறகு 1995ல் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகள் அங்கு நீதிபதியாக இருந்தார். அப்போது அவர் பல முக்கிய வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து 2005ல் அவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர், 2007ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகச் சுமார் 4 ஆண்டுகள் பணியாற்றிய இவர், 2011ல் ஓய்வு பெற்றார். 2013ல் கோவாவின் முதல் லோக்ஆயுக்தா தலைவராகவும் சுதர்சன் ரெட்டி நியமிக்கப்பட்டவர்.
